தொட்டிச் செடியின் ஒற்றை ரோஜாவுக்கு நீர் வார்த்த மனைவியைப் பார்த்து மேலே பார்க்காமலே பின்னால் போனது நினைவுகள். வருவாய்ப் பிரச்சனையில் ஆங்கிலப் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறியபோது ஏதோ அயல் கிரகத்தில் நுழைந்தது போல் ஒரு உணர்வு.
அயல் தேசத்தில் அறிந்த முகங்களாய் வகுப்பறைக்கு வராமலே பாடம் படிக்கும் ஆவலோடு கிளைகள் நீட்டி கூப்பிட்ட புங்கை மரங்கள் ,எனக்கு முதல் தோழனானது .
ஆங்காங்கே வெட்டிவிட்ட பெயர்களை முட்டிக் கொண்டு காட்டி முகத்தை வருடும் இலைகளோடு கைகள் விரித்துக் கூப்பிட்டு சகோதரனைப் போல் பாசம் காட்டின அவைகள் இல்லை அவர்கள்.
என் எழுத்தின் வாசத்தை புரிந்து கொண்டோ என்னவோ , நான் எழுதும் கவிதைகளுக்கு விசிறி வீசும் அந்த புங்கை மரத்தின் வாசம் என் நெஞ்சில் எப்போதும் நீங்காத நேசம்.
ஆண்டுகள் தீர்ந்து வகுப்பு மாறுகையில் , வாசலில் கைகட்டி வழிமறித்து நின்றது அந்த பாதாணி மரம். என் மதிய உணவில் ஒரு பகுதியை உரிமையோடு அந்த மரத்துக்கு நான் கொடுக்க, உவகையோடு நல்ல தாயைப் போல கூட்டுப் பறவைகளுக்கெல்லாம் பிரித்துக் கொடுத்து மகிழும்.
காய்ந்து விழுகின்ற அதன் காய்களைக் கொண்டு எறிபந்து விளையாடுகையில் , அதன் அகன்ற அடிப்பாகத்தில் ஒளிந்து மறைய யாருக்கும் தெரியாமல் அதன் வாசத்தை முகர்ந்திருக்கின்றேன். அது என் தாயின் முந்தானையைப் போல் அத்தனை வாசம்.
இறுதித் தேர்வு முடியும் தருணம் இலைகள் உதிர்த்து கிளைகள் காட்டி இறுகி நிற்கும் வேப்பமரங்கள், என்னைவிட அதிகமாய் மனனம் செய்திருக்கும் என் பாடங்களை. கடைசித் தேர்வு முடிந்து போகையில் மௌன சாட்சியாய் கைகட்டி நிற்கும் அந்த மொட்டைத் துறவிகள்.
மே மாதத்தின் முதல் வாரம் , வாசம் குறையா புத்தகப் பைகளோடு , விறைப்பு குறையா புதிய உடுப்புகளோடு ஓடி வருகையில் இலைகள் துளிர்த்து இனிதாய் சிரித்து துளிர்த்து நிற்கும் நாவல் மரங்கள் . ஒரு மாதம் கழிகையில் ஒரு லட்சம் நாவல் பழங்களை வள்ளலைப் போல வாரி இறைக்கும். வகுப்பின் மதியம் வீசும் காற்றும் நாவல் வாசத்தை நுரையீரல் தாண்டியும் நுகர வைக்கும்.
இருக்கும் மரத்தின் தலைவனைப் போல எல்லாப் பழங்களையும் தனக்குள் வைத்திருக்கும் பெரிய மரம் இருக்கும் இடமோ தலைமையாசிரியரின் அறைக்கு முன்னால். போருக்குப் புறப்படும் படையணிப் போல முந்தைய நாளே தயாராகும் அத்தனைத் திட்டங்களும் . பள்ளி துவங்க ஒரு மணி முன்னால், சிறப்பு வகுப்பென பொய்யொன்றைச் சொல்லி நானும் நண்பர்களும் கற்களோடு வந்து விடுவோம்.
நிஜமாகவே அந்த மரத்தில் லட்சம் பழங்கள் இருக்குமோ என்னவோ வீசும் ஒவ்வொரு கல்லுக்கும் வந்து விழும் ஆயிரம் பழங்கள் . பொறுக்கி பொறுக்கி நேரத்தை கடக்க பையை நிரப்பிய பழங்களின் வாசம் , வகுப்பறை முழுதும் வட்டம் போடும். முதல் வகுப்பின் ஆசிரியர் கால்கள் நேரே வந்தென் முன்னால் நிற்க நீட்டிய பிரம்பிற்கு பழங்களை கொண்டு பண்டம் மாற்றிட புன்னகையோடு திரும்பிப் போவார்.
நாவல் பழங்களின் நீலம் மாறா நாக்கின் சிரிப்புகள் பள்ளி தாண்டியும் பயணம் செய்தன என் படிப்போடு. கல்லூரிக் காலம், வேலையின் பாரம், வாழ்வின் தூரம் எங்கோ தொடங்கி எங்கோ செல்ல ,எப்போதாவது சாலையில் கடக்கும் கூடை வியாபாரியின் மணக்கும் பழங்கள் நினைவுபடுத்தும் அந்த லட்சம் பழங்களை.....
அந்த மணத்தோடு, அலுப்பு குறையாமல் அடுக்குக் குடியிருப்பின் சொற்ப இடத்தில் எனைப் பார்த்து பல்லிளிக்கும் தொட்டிச் செடியின் ஒற்றை ரோஜாவுக்கு தினமும் சொல்கிறேன் நீல நாக்கோடு , நான் படித்த நாவல் மரங்களைப் பற்றி.......
1 comment:
அருமையான பதிவு
Post a Comment