பொறந்த பொறப்புக்கும் வாழுற வாழ்க்கைக்கும் உருப்படியா ஏதாவது பண்ணனும்னு ஒரு ஞானோதயம் .சரி என்னடா பண்ணலாம்னு நெனச்சு அரசியலுக்கு வரலாம்னு முடிவு பண்ணுனேன்.
சரி அதுக்குன்னு ஒரு தகுதி வேணாமான்னு யோசிச்சா நான் ஒண்ணும் அரசியல்வாதி புள்ளை இல்லை, இல்ல ஊருல ஒண்ணும் சொத்து பத்தும் இல்ல , அட நான் சினிமாக்காரனும் இல்லீங்க அப்ப வேற எப்புடி தான் அரசியலுக்கு வரது.
கந்து வட்டி , கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, போலீஸ் ஸ்டேசன்ல மரியாத , இப்புடி எதுவுமே தெரியாதுங்களே...
சின்ன வயசுல இருந்தே அரசியல் ஒரு சாக்கடை, குப்பை அதுல வெறும் தப்பு மட்டும் தான் நடக்கும்னு சொல்லியே வளர்த்துட்டாங்களா அதனால ஒரு நடுக்கம்ங்க. ஆனாலும் நாட்டப் பத்தி நெனச்சா தின்ன சோறு தொண்டைக்கு கீழ எறங்கலைங்க.
எத்தனையோ பெரிய தலைவர் மாருங்கல்லாம் அடிபட்டு கஷ்டப்பட்டு வாங்கிக் குடுத்தததா சொல்றாங்களே சொதந்திரம் அது எங்கன்னே தெரியலீங்க..
ஊருல இருக்குற நாலு பெரிய மனுஷங்கள கேக்கலாம்னு பொடி நடையா போனேனுங்க..ஊருக் குப்பைய தெருவெல்லாம் கொட்டிகிட்டே போன குப்பை லாரி கண்ணை மூடிருச்சுங்க. பஞ்சாயத்து ஆபிஸ் வாசலுல கலர் கலரா கரை வெட்டிங்க( வேட்டிங்க), குனிஞ்சு பாத்தா என் வேட்டி கரை படாம வெள்ளை வெளேர்னு இருக்குதுங்க .
உள்ள போனா போர்டு வெக்காத கொறைங்க, ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு ரேட் போட்டு வசூலோ வசூல்,
அப்புடியும் அடங்காம காசக் குடுத்து ஒருத்தர்கிட்டக் கேட்டேன் சொதந்திரம்னா என்னான்னு, ரொம்ப யோசிச்சி சொன்னார் .
என் வீட்டுல எல்லா டிவி சானலும் வருது, எல்லாப் புள்ளைங்களும் கையில செல்போனோட சுத்துறாங்க, எல்லா வீட்டு புள்ளைங்களும் படிச்சி முடிச்சி அமெரிக்காவுல வேல பாக்குறாங்க, ஸ்டாக் மார்க்கெட் நல்லா இருக்கு..அதான அப்புறம் என்னான்னார்..
கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருந்துச்சு , கொஞ்சம் புரியாத மாதிரியும் இருந்துச்சு.
கரண்ட் போனா வர நாலு மணி நேரம் ஆகுது, கவர்மன்ட் ஆபிஸ்க்கு போனா காசு குடுக்காம வேலை நடக்கல, நம்ம வீட்டு பொம்பளைங்க நிம்மதியா ரோட்டுல நடக்க முடியல, அப்புறம் என்ன சொதந்திரமோ...
No comments:
Post a Comment