Tuesday, May 17, 2011

தீக்குளித்த தேசம் - மே 18 இனவழிப்பு நாள்


கூடிய கூட்டம் 
குண்டுகள் அழிக்க
ஒளிந்து மறைய 
ஒரு இடம் இல்லை ...

இதோ இங்கே 
இன்னும் பக்கத்தில் 
மரணம் சிரிக்கிறது ...

கடலலை சப்தத்தை 
வலியின் ஓலம் 
தின்று செரிக்கின்றது....

கதறும் உறவுகளில்
எதைக் காப்பாற்றி
எதை விடுவது...

சுமந்து சுமந்து
தோள்கள் வலிக்க
உணர்வின் வலியோ
இன்னும் தூண்டுகிறது...

பால்மா இல்லா
பச்சைப் பிள்ளைகளுக்கு
இருக்கும் உணவில் 
சோறு படைக்க...

குண்டடிப்பட்ட உறவின்
ரத்தச் சதைகள் 
வந்து விழுகின்றன
வேகும் சோற்றில்.....

தூர எறிந்து
புதிதாய்ச் செய்ய
ஏதும் இல்லை..
உப்பிடாமலே கரிக்கிறது
உண்ணும்போது....

எண்ணமுடியா கடல்மண்
ஒவ்வொரு துகளிலும் 
உறைந்த இரத்தம்
கருப்பாய் நிறைய...

சுற்றி நின்று
சுட்டுச் சிரிக்கிறது
சிங்களக் கூட்டம்.
உண்ட உணவு 
செரிக்கும் முன்னர்
வந்து விழுகின்றது
பிள்ளைக் குடல்கள்...

ஓடத் தொடங்க
எத்தனிக்கையில் 
உற்றுப் பார்த்தால் 
கால்கள் இல்லை..
வலியினும் கொடிதாய்
வீழ்ந்துவிட்ட துன்பம்...

விழித்துப் பார்த்தால்,
முள்ளும் கம்பியும் 
சுற்றி நிற்கிறது..
வீழ்ந்து விட்ட 
தமிழினமோ 
மண்டியிட்டு நிற்கிறது...

கழிக்கவும் குளிக்கவும்
செம்புத் தண்ணீர்
கன்னிப் பெண்களிடத்தில்
எப்போதும் கண்ணீர்..

சொன்னதையே சொல்லி
பார்ததயேப் பார்த்து
பாதி சனம்
பைத்தியம் ஆனது...

துப்பாக்கி முனையில்
விரிந்த யோனிகள்
சிங்களக் கருவுக்கு
புகலிடம் கொடுத்தது...

தாயோடும் மகளோடும்
ஒன்றாய்ப் புணர்ந்தனர்
தடுத்த தந்தைக்கு
குண்டடி கொடுத்தனர்..

எம்மைப் பார்க்க
உறவுகள் வந்தன
விலங்குகள் போலே 
கம்பிக்கு அப்பால்
கூனி நின்றோம்

உறவுகள் அல்லா 
ஏங்கி நின்றவர்
கண்ணில் தெரிந்தது
ஏக்கமும் அழுகையும் மட்டுமே....

என்று பிறக்கும் 
எங்கள் நாள்
அரசாள அல்ல;
எளிதாய் உண்டு; 
எளிதாய் உறங்கி;
எங்கள் உடம்பின்
அழுக்குகள் போக்க,
நன்றாய் குளிக்க........................










No comments: