திரும்பிப் பார்...
சன்னலின் வெளியே எட்டிப் பார்க்கிறான் முகிலன்.கண்முன்னே அவன் ஏமாற்றிய எல்லாப் பெண்களும் வந்து போகின்றார்கள். வண்டி மிச்சமிருக்கிற அவன் ஆயுளைத் திங்க சிறைச்சாலை நோக்கி நகர்கின்றது.
பத்திரிக்கயாளர்கள் நீட்டிய மைக்கின் முன்னால் முழங்குகின்றார் இன்ஸ்பெக்டர் கதிரவன், " தன்னுடைய மனைவியை படுக்கையில் வேறொருத்தரோட பாத்த ஆத்திரத்தில் அவங்க ரெண்டு பேரையும் கொலை பண்ணிருக்கார். தானே சரணடைஞ்சு குத்தத்தையும் ஒப்புக்கிட்டார், மத்த விஷயங்கள் விசாரணையில் தெரிய வரும்."என்றவாறே வண்டியைக் கிளப்புகின்றார்.
"என்னய்யா வேணும்", வாசலில் நிற்கும் கான்ஸ்ட்டப்ளின் குரல் அதிகாரமாய் ஒலிக்கின்றது. இன்ஸ்பெக்டர் பாக்கணும் உள்ள இருக்கார் போய்யா. திறந்து விட்ட சட்டை பட்டன்களோடு யாரையோ போட்டு வெளுத்துக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் கேட்கிறார். " என்னய்யா வேணும் ....? " சார் என் பேர் முகிலன் பின்னாடி இருக்குற வீட்டுல தான் குடி இருக்கிறேன். என் மனைவியோட நடத்தை சரி இல்லாததால அவளையும் அவ கூட இருந்தவனையும் நான் கொன்னுட்டேன். என்னை கைது பண்ணுங்க. எச்சில் முழுங்க இன்ஸ்பெக்டர் " யோவ் ஏட்டு இந்த ஆளத் தூக்கி உள்ளப் போட்டு ஸ்டாடேமென்ட் வாங்குயா.."
ஓங்கி அறைந்த கடப்பாரை இருவரையும் சாய்த்து விட்டது . மன்னிப்புக் கேட்டுக் கொண்டே செத்துப் போன அனித்தாவும் கார்த்தியும் வாயைப் பிளந்துக் கொண்டு கிடந்தார்கள். ஒரு முடிவோடு வீட்டின் பின்புறம் இருக்கும் காவல் நிலையத்திற்கு கிளம்பி போனேன்.
"என்னங்க எனக்கு ஒண்ணும் தெரியாது . தனியா இருந்த என்கிட்டே இவர்தாங்க தப்பா நடந்துக்க பாக்குறார். சீ வாய மூடுறி , அதான் என் கண்ணு முன்னாடியே எல்லாத்தையும் பாத்துட்டனே."
கதவுப் பக்கம் செல்லாமல் பெட்ரூம் சன்னலின் அருகே சென்று பார்த்தால் உள்ளே நண்பன் கார்த்தியோடு அனித்தா பின்னி பிணைந்தவாறு . வந்த ஆத்திரத்திற்கு தோட்டத்தில் கிடந்த கடப்பாரையை த்தூக்கிக் கொண்டு பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்தேன்.
ச்சே இன்னைக்கு எவ்வளவு அலைச்சல் தேவை இல்லாமல் இந்த ஏர் போர்ட்க்கு வந்து இப்போ பிளைட் கான்சல் ஆகி வீட்டுக்கு திரும்பப் போக வேண்டி இருக்கிறது. இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் விமலாவோடு ஏதாவது ரிசார்ட் புக் பண்ணி இருக்கலாம்.வீட்டு கேட்டுக்குள் நுழையும் போதே விளக்கு எறிவது தெரிந்தது. இன்னும் என்ன செய்கிறாள், அவளுக்கு விளக்குப் போட்டுக் கொண்டுத் தூங்கும் பழக்கமும் கிடையாது. ஒருவேளை...
என்னங்க இப்ப அவசியம் இந்த டூர் தேவையா . உங்கள விட்டு என்னால ஒருநாள் கூட இருக்க முடியாதுன்னுத் தெரியுமில்ல , அப்புறம் ஏன். இல்லம்மா ஆபீஸ் டூர் கண்டிப்பா நான் போயி ஆகணும் வெள்ளிக்கிழமை மார்னிங் எட்டு மணிக்கெல்லாம் இங்க இருப்பேன். ஓகே வா உம்மா..கார் தெருமுனையில் திரும்பும் வரை அனித்தா வாசலிலேயே நிற்பது ரியர்விஎவ் மிர்ரோரில் தெரிந்தது.
இன்றோடு மூன்று வருடம் ஆகின்றது திருமணம் ஆகி . அனித்தா என் ஆசை மனைவி. நான் எதை சொன்னாலும் நம்பிவிடுகிற அப்பாவி. இதை வைத்து தான் ஆபீசில் வெளியில் என்று என்னுடைய வேட்டை நடக்கிறது. அடுத்தவர் மனைவியை ருசிப்பதன்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம். எல்லாம் ஒரு முறைத் தான். அதன் பின் அவர்கள் கதறி அழுதாலும் அவ்வளவுதான். இதில் திருமணமாகாத இளம்பெண்களும் உண்டு. நானொரு காதல் மன்னன். ஆனால் ஒரு முறை கூட யாரையும் ஏமாற்றுகிறோம் என்று வருத்தப்பட்டதில்லை.
(பின்குறிப்பு: இந்த கதையில் ஆரம்பம் தான் முடிவு . முடிவு தான் ஆரம்பம். புரியாதவர்கள் , கடைசிப் பத்தியிலிருந்து படித்துக் கொண்டு போங்கள்)
No comments:
Post a Comment