அன்புள்ள கமீலாவுக்கு.....
நான் இங்கு நலமா இருக்குறேன். இப்ப தான் வந்த மாதிரி இருக்கு சௌதிக்கு, பதினெட்டு வருஷம் ஆயிடுச்சு. உன்ன நிக்காஹ் பண்ண நாள்ளர்ந்து போன்லதான் அதிகமா குடும்பம் நடத்திட்டு இருக்கோம். பெரியவ ஆயிஷா பொறந்தப்பவே ஊரோட இருந்தர்லாம்னு தான் முடிவு பண்ணேன். ஆனா இருந்த கொஞ்ச காசுல தங்கச்சியோட கலியாணத்த முடிச்சிரலாம்னு வாப்பா பிடிவாதமா இருந்துட்டார். இப்புடியே ஒவ்வொரு வருஷமும் ஏதோ ஒரு காரணத்துனால திரும்பத் திரும்ப இங்க வர்ற மாதிரி ஆயிடுச்சி. ஆனா போன தடவ நீ போன் பண்ணும்போது ஆயிஷா பெரிய மனுஷி ஆயிட்டான்னு சொன்னத கேட்டவுடனே யா அல்லாஹ்..எல்லார மாதிரியும் எனக்கும் ஒரு நிம்மதியான வாழ்க்கைய கொடு.
இந்த வருஷத்தோட இந்த சௌதி வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி .காலையில எழுந்து தொழுது முடிச்சிட்டு சுலைமான் பாய் கடையில் டீய குடிச்சிட்டு பள்ளிவாசல் பின்னாடி இருக்குற கால்வாயில குளிச்சிட்டு உன் கையால மணக்க சாப்பிட்டுட்டு ஆயிஷவோடையும் அப்துலாவோடயும் விளையாடனனும்னு ரொம்ப ஆசையா இருக்கு,
நான் வேல பாக்குற கம்பனியில சொல்லிட்டேன். அதனால என்னோட ரிட்டயர்மென்ட் பணம் கொஞ்சம் வரும். ஊருல இருக்குற காசு போதும். அத வெச்சு புள்ளைங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணிடலாம் .
வாப்பாவ ஹஜ்ஜுக்கு அனுப்பிட்டா இருக்குற ஒரு கடமையும் முடிஞ்சிடும். ஆனா கமீல நீயும் இத்தன வருஷம் ரொம்ப பொறுமையா இருந்துட்ட.காலம் போன கடைசியிலாவது கொஞ்சம் சந்தோசமா வாழணும்னு ஆசைப்படுறேன்.
நான் ஊருக்கு வர்ற அன்னிக்கு எனக்கு புடிச்ச ரோஸ் கலர் புடவை கட்டிக்கோ. போன தடவ அப்துல்லா கேட்ட யமஹா கிபோர்ட் வாங்கி வச்சுருக்கேன். ஆயிஷவுக்காக 10 பவுன்ல ஒரு நெக்லஸ் வாங்கி இருக்கேன்.
தூக்கமே வர மாட்டேங்குது உங்களையெல்லாம் பாக்கப் போறத நெனச்சா..
சென்னைக்கு டைரக்ட் பிளைட் இல்லையாம் . அதனால மங்களூர் வந்து அங்க இருந்து வந்துறலாம்னு இருக்கேன். நீ புள்ளைங்களக் கூட்டிட்டு ஏர்போர்ட்டுக்கு வந்துடு.
இப்படிக்கு
உங்கள பாக்கக் காத்திருக்கும்
ஷாஜஹான்
வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள்
சௌதியிலிருந்து மங்களூர் வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 165 பேர் பலி.......
2 comments:
நாளைய இயக்குனர் நிகழ்ச்சில
உண்மை சம்பவத்திலிருந்து ஒரு கருவ எடுத்துக்கிட்டு குறும்படம் பண்ணினாங்க ,அதே மாதிரி நீங்களும் நல்லா எழுதிருக்கிங்க
மனதை கனக்கச் செய்யும் கதை(?).
இதுபோல் மங்களூர் விபத்தில் பயணித்தவர்கள் மனதில் எத்தனை எண்ணங்கள் இருந்திருக்கும். எவ்வளவு கனவுகள் அழிந்திருக்கும்.
Post a Comment