Tuesday, May 18, 2010

விதைகளாய்த் தானே விழுந்தோம்...

ஆண்டொன்று ஆகின்றது அந்த கொடுமை நடந்தேறி.உரங்களுக்குப் பதிலாய் பாஸ்பரசும் கந்தகமும் தான் எங்கள் பயிர்களை விளைவிக்கின்றது. முள்வேலி முகாம்களுக்குள் நாற்றமடிக்கிற பீயும் மூத்திரமும் கழுவக் கூட தண்ணீர் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளை சோறு கொடுத்து ,ஒண்டி கொட்டகையில் உறங்க செய்து எங்கள் சுதந்திர தாகத்தை கொன்று விட்டதாய் நினைக்கிறது சிங்கள அரசு.
எம் மனைவியும் , தங்கையும் , தாயையும் மானமிழக்கச் செய்து மறத் தமிழச்சிகளின் கற்பில் குளிர் காய்கிறது இனவெறிக் கூட்டம்.
அவர்களுக்கு ஒன்று புரியவில்லை, எமது சோற்றில் நாங்கள் போடும் உப்பு கடல் நீரில் காய்ச்சி எடுத்தது இல்லை , எம் இனத்திற்காய் சேத்து மடிந்த வீர மறவர்களின் உதிரம் என்று.
எம் பிள்ளைகளுக்கு நீ சிங்களமே கற்று கொடு. அவன் வளர்ந்து பெரியவனானதும் என்னிடம் கேட்பான். அம்மா நீயும் நானும் ஏன் வேறு வேறு மொழி பேசுகிறோம்..? என்று , அவனிடம் நான் சொல்வேன் . அய்யா நீ பேசுகிற மொழிக்கு சொந்தக்காரன் தன் மொழி அழிந்து விடுமோ என்ற பயத்தில் உனக்கு கற்றுக் கொடுத்தது. நான் பேசுகிற மொழியோ எம் பாட்டனுக்கும் பாட்டன் அவனுக்கும் பாட்டன் உருவாக்கி வைத்தது . அது அழியவே அழியாது யாராலும் சிதையாது.
ஓ அனைத்துலக சமுதாயமே, இந்த ஈழத்து மண்ணில் வைரமும் , தங்கமும் நீங்கள் ஓடி தேடுகிற பெட்ரோலும் இல்லை என்று தானே எங்கள் அழுகுரல் கேட்டு நீங்கள் ஓடி வரவில்லை. உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் , இங்கே அதைவிட விலை மதிப்பில்லாத கொள்கை வெறியும் , நேர்மையின் தீரமும் கொண்ட ஒரு இனமானக் கூட்டம் வாழ்கிறது . அது நீங்கள் எங்கே தேடினாலும் கிடைக்காது.
உலக வரலாற்றை கொஞ்சம் புரட்டி பாருங்கள் எங்கெல்லாம் சாதியின் பெயரால் மொழியின் பெயரால் , நிறத்தின் பெயரால் ஒரு கூட்டம் அடக்கி வைக்கப்பட்டதோ அது வீறு கொண்டு எழுந்திருக்கிறது. உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அவர்களே இது உங்களுக்கு நன்றாகவே புரியும்.
எங்கள் பாவத்தில் கல்லெறிகின்ற  கூட்டமே எங்கள் பிள்ளைகளை சகோதரர்களை நாங்கள் புதைக்க வில்லை . விதைத்தே இருகின்றோம் .சுடர்மிகு அறிவுடன் பிறந்திருக்கின்றோம் .இந்த மானுடம் பயனுறவே வாழ்வோம்.


வறுமைக்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும்..!

No comments: