Monday, July 25, 2016

ஒரு தேனீர் குவளையும் ஓராயிரம் சேரிகளும்

கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளாகியிருக்கின்றது சாதி . பொதுவாக , வெகுஜன வெளியில் ஒரு கலைஞன் சாதியின் பெயரால் விமர்சிக்கப் படுகின்றான்.
ஈரோட்டுக் கிழவன் மாற்றி  வைத்த  நம் மனங்களில் ஒளிந்திருக்கும் வன்மம்  கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுகின்றது .
             எங்கே இது தொடங்கியது..?
1.முகநூலில் மெதுவாக நம் சாதி பெயரை அடைமொழி ஆக்குகின்றோம் .
2.சாதிய அடிப்படையில் ஒரு அரசனையோ அல்லது வீரனையோ நமதாக்கி  கொள்கிறோம் .
3.ஏதோ ஒரு கட்சேவி உரையாடலையோ அல்லது யாரோ ஒருவரின் அபத்தப் பதிவையோ  நம்மையும் அறியாமல் பகிர்கிறோம்

அதே சமயம் சாதியின் பெயரால்  நிகழ்த்தப்படும் ஒரு வன்கொடுமையையோ அல்லது  ஒரு படுகொலையையோ வன்மையாகக்  கண்டிக்கிறோம்.வெள்ளத்தின் போது ஓடி வந்து உதவிய ஒரு சமூகத்து  மக்களை  வானளாவப்  புகழ்கிறோம் .  
               எது நாம், எது நிஜம் ..ஒரு சிறிய கதை கொஞ்சம் பழைய கதை ....
வெளிநாட்டில் என்னோடு பணிபுரிந்த  நண்பர் அவர் .அவருடைய  மனைவியும் மிக இனிமையானவர் ஒரு மேல்தட்டு  சமூகம் என்று கூறப்படும்  வகுப்பைச் சேர்ந்தவர் .சமதர்மம் .சாதிய ஒழிப்பு  குறித்து முழங்குவார் .அவர் வீட்டு சமையலறை வரை இந்த விவாதம் போகும் .
                    சில ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்திருந்தார்,தொலைபேசியில் உரையாடினோம் ,அழகான  நட்பை நேரில் பார்க்கும் ஆவலில் சென்னையில் உள்ள  அவர் வீட்டுக்கு சென்றேன்.என் சிரிப்பை புறந்தள்ளியது அவர்களின் அளவெடுத்தப் பார்வை .வீட்டு முற்றத்தின் மூங்கில்  நாற்காலியில் தொடர்ந்தது பேச்சு .....தேனீர் வந்தது .மொத்தமாய்  செத்துப் போனேன் அந்த குவளையைக் கண்டு ..
        வெகு  காலத்திற்க்கு முன் ஒழிக்கப்பட்ட ஒரு அவமானம் என் கால்களை  சூழ்ந்து கொண்டது .வாசலையும் என்னையும் மாறி மாறி பார்த்த அவர் பார்வைக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு கிளம்பினேன் .
         இது தான் நாம் . நம்மால் இன்னும்  சேரிகளின் சோகங்களை புரிந்து கொள்ள இயலாது .ஒன்று தெரியுமா ? சேரியிலும்  சாதி உண்டு .கண் கூடாக கண்டிருக்கிறேன் .நம்மில் கீழானோர் என்று சிலரை எண்ணுவர்.நகைப்பு தான் வரும் .
         திருமணத்துக்கு பந்தல்  கட்ட வந்த முதியவரை வீட்டுக்குள் அழைத்து உணவிட்டதற்காக பற்றி எரிந்தது சாதித்தீ என் சொந்த வீட்டிலேயே .இங்கே பிரச்சனை நாம் தான் .சாதி நம் எல்லாரிலும் எங்கேயோ  ஒளிந்து கொண்டு ,சரியான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது .
              அதனால் தான் ஒரே ஊர்க் காரர்கள் வெளியூரிலோ வெளிநாட்டிலோ சந்திக்கும் போது , "என்ன சாமி கும்பிடுறவங்க நீங்க..?" என்று சூசகமாக கேட்கின்றார்கள் .
           நண்பர்களே நான் கும்பிடும் ஒரே சாமி "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்று சொன்ன வள்ளுவன் ஒருவனே .....அதுதான்  நிஜம் .
             எப்போதாவது சேரிகளைக் கடந்து செல்லும் போது ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் , நெடுங்காலமாக அவர்கள் போராடுவதும் ,அவர்களுக்கு மறுக்கப் படுவதும் நீங்கள்  வாழும் ஒரு சாதாரண வாழ்க்கை  என்று ...
               

No comments: