"சமுத்திரத்தின் நடுவே தமிழன் வடித்த கண்ணீர்ச் சொட்டு இலங்கையாகிக் கிடக்கிறதா..?
ஒவ்வொரு மறை அச்சடிக்கப்படும்போதும் உலக வரைபடத்தில் இலங்கைக்கு மட்டும் இன்னும் இரத்த நிறம்தானா..?
இது மனிதனை மனிதனே விரட்டும் மஞ்சுவிரட்டு.. இனவெறித் தீயில் விறகுகள் மட்டுமா..? பானைகளே பற்றி எரியும் பயங்கரம்.
நீரில் நீந்தும்போது நனையாத இந்தத் தீவு போரின் தீயில் மூழ்கிப் போனதா..?
இலங்கையில் மட்டும் வருங்கால மாணவர்கள் வரலாறு படிக்கும்போது இன்னும் எத்தனை ஆண்டுகள் இறந்த காலமும், இறக்கும் காலமும் நிகழ்காலமாய்த் தெரியும்..?
சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கவில்லை.. வீதி சமைத்துக் கொண்டிருக்கிறது தமிழனை..
திசைதோறும் உலக அமைதிக்காகப் போதித்தவனின் திருச்சபையில் ஒப்பாரி உலா.
சாஸ்திரிய சங்கீதத்தின் மேனியில் ராப்பகலாய் பறைக்கொட்டு..
ராவணன் ராகம் வளர்த்த ராஜ்ஜியத்தில் அபஸ்வரங்களின் ஆட்சி..
பெயர்த்தெடுத்து வந்த அடுத்தவர் மனைவியிடம்கூட அவன் தோற்றுவித்த தொடா நாகரீகம் மண்ணில் உயிர்த்து வளர்ந்தவர்களிடம் மரித்துப் போனது.
மெளனமற்றுப் பபேன மயான பூமியே.. உனது வானொலி தமிழைச் சவைத்தது - நீ தமிழர்களைச் சுவைத்துவிட்டாய்..
தேசத்தின் திசை எங்கும் உட்கார்ந்திருக்கிற கரம் இலங்கை அரசின் இதயத்தைவிட்டு எப்போது வெளிநடப்பு செய்தது..?
ஒரு இலக்கியச் சீதையின் கற்பு காக்கப்பட்டபோது அது அசோக வனம் - இன்று சோக வனம்..
இந்த மனித இனத்திற்கு குண்டு துளைக்காத உடை.. விஷம் கலக்காத காற்று.. உயிர் பறிக்காத உறைவிடம்.. தர உத்தரவாதம் யார்..?
புராதன ஜடாயுக்களின் புனிதம் போய் - மனிதம் பிணந்தின்னிக் கழுகுகளின் பெரும் பிடியில்..
இது அஹிம்சையை போதித்த புத்த பூமியை இல்லை ரத்தத்தால் எழுதப்பட்ட யுத்த பூமியா..?
மானுடத் தீப்பெட்டியில் குச்சிகளைக் குச்சிகளே கொளுத்தும் கொடூரம்..
போர்ச்சத்தத்தில் பூக்கள் சுமந்த மரங்களின் கருச்சிதைவு..
மலடாகிப் போனது மண்ணின் செடி, கொடிகள்..
படுகொலையைப் பயிர் செய்து பாத்தி கட்டி உயிர் அறுவடைகள்..
சடலங்களையே கரையாக்கி சமுத்திர அலையோட்டம் சாவின் துர்நாற்றம்..
தன் ஆவியைக் கூவி விற்று ஆயுளையே பசிக்குத் தின்னும் தமிழனுக்கு - கடல் நீரின் நுரைப்பூக்கள் மட்டுமே கரை ஒதுங்கி கண்ணீர் அஞ்சலி..
அங்கு மட்டும் கடல் நீரின் நிறம் சிவப்பு.. உப்பும் கசக்கிறது..
இமயம் இன்று குமரியைக் காக்க எழுந்து நின்றதடா..!
இயக்குநர் இமயம் இன்று தமிழ்க் குமரியைக் காக்க எழுந்து நின்றதடா..!
எழுத்தும் பாட்டும் இயக்கமும் சேர ஈழம் வென்றதடா..!
உழைப்பவர் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தார் உணரட்டும் மத்திய அரசு..!
ஒவ்வொரு தமிழனின் விரல் நுனிமையும் ஓட்டு
ஆட்சியைப் புரட்டும் முரசு..!
உலகத் தரத்துக்கு படமெடுக்கும் திரை உலகே!
கலகத் தரக்கரை வேர் அறுக்க
பொறுப்பு இருக்கு உனக்கும்..
பொறுப்பு இருக்கு உனக்கும்..!
வன்முறை வேண்டாம் என்பதற்காக
எத்தனைப் படங்கள் எடுத்தோம் நாம்!
வறுமையும் பசியும் போவதற்காக
வழிகள் சொல்லிக் கொடுத்தோம் நாம்..!
என் தமிழ் இயக்குநர் இந்திவரைக்கும்
வென்றது தமிழன் வெற்றியடா!
நல்லதும் கெட்டதும் சொல்கிற நாமே
நாளைய உலகின் தொட்டிலடா!
தர்மம் வெல்லும் என்னும் முடிவை
படங்களில் வடித்தவர் நாம்..?
அதர்மம் மத்தியில் ஆண்டு கொண்டிருந்தால்
எப்படிப் பொறுப்பது நாம்..?
தமிழனை வைத்து தமிழால் உயர்ந்தோம்!
தமிழனை ஏன் மறந்தோம்-ஈழத்
தமிழனை ஏன் மறந்தோம்?
உண்டும், உறங்கியும் வாழ்வது என்றால்
இருந்தும் நாம் இறந்தோம்..!
இருந்தும் நாம் இறந்தோம்..!
ஓட்டு ஆயுதம் கைகளில் இருக்கு
உணரட்டும் மத்திய ஆட்சி..!
ஒவ்வொரு தமிழனும் நினைத்தால்போதும்
தலைமை மாறும் காட்சி..!
அத்தனை பேரும் முடிவெடுப்போம்!
அநீதியைத் தடுப்போம்!
ஆட்சியில் இருக்கும்
கைகளை முறித்து
விடுதலை நாம் கொடுப்போம்-ஈழ
விடுதலை நாம் கொடுப்போம்..”
No comments:
Post a Comment