Wednesday, March 18, 2009

வீடு

வீடு

நம்முள் ஒன்றோ ! நம் குடும்பத்தில் ஒன்றோ !
வாழ்க்கையின் முக்கியமான அங்கமோ !
எப்படியாயினும் அதற்கான இடம் உறுதி .

பெருகிப்போய்விட்ட வேலை வாய்ப்புகள் , பெரு நகரங்களுக்கு இடம்பெயர்தல் போன்ற பல்வேறு காரணங்களால் தீப்பெட்டிகளை போல ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட இடநெருக்கடியின் குறியீடாக வீடுகள் மாறிவிட்டன
சிறுவயதில் ஒரு வாடகை வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு போகும் பொது சுருட்டி வைக்கப்பட்ட மெத்தையின் மீது அமர்ந்து கொள்வது எனக்கு பிடித்தமான விஷயம் . ஒவ்வொரு வீடாக மாறிச் செல்லும்போது கதவில் ஓட்டபட்டிருக்கும் தீப்பெட்டி அட்டைகளோடு சேர்த்து வேறு ஏதோ ஒன்றையும் விட்டுச் செல்வதாகவே தோன்றும் .

பழகிய மனிதர்கள் , உட்கார்ந்து பேசிய வீட்டு திண்ணைகள் , தினம் தினம் நீர் விட்டு பதியம் போட்ட மல்லிகையும் வேம்பும் கொய்யாவும் மணக்கும் தோட்டங்கள் , சந்தித்த மரணங்கள் , மழை இரவில் காணாமல் போன சைக்கிள் , மறைந்து நின்று பார்க்கும் தாவணி சிரிப்புகள் , திருவிழாவுக்காக காத்திருக்கும் தெருவோரக் கோவில்கள் .. எத்தனை.. எத்தனை..
வீடு எப்போதுமே ஒரு நல்ல ஆசிரியன் ....!
மேலாண்மை , நிர்வாகம், கணக்கு, விஞ்ஞானம் , வேளாண் என்று உலகின் அத்துணை நற்கூருகளுக்கும் ஆதார மூலம்...

மழை ஒழுகும் கூரையானாலும் பனி கொட்டும் நாட்டு ஓடானாலும் நிலவுடனான சிநேகத்தை உறுதிப்படுத்தும் மொட்டை மாடியானாலும் இரவு தூக்கம் வீட்டில் மட்டுமே என்று நினைக்க தோன்றும் .
புதிய சிமெண்டு தளத்தில் கால் பதித்த பிள்ளையின் கால்தடங்களைப் போல வீடும் அதன் நினைவுகளை எல்லாருடைய மனதிலும் ஆழமாக பதிக்கிறது.

நாட்குறிப்பின் வேகமான கிழிசல்களும் நகர்ந்து செல்லும் வாகன இரைச்சல்களும் பணத்தைத் தேடி ஓட வைக்கும் வாழ்க்கை மாற்றங்களும் மீண்டும் என்னை சுருட்டி வைக்கப்பட்ட மெத்தை போன்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலேயே உட்கார வைத்திருக்கின்றது.

No comments: